கிம் லிம்மின் 73,000 வெள்ளி ஆடம்பரக் கடிகாரம் திருட்டு! நிறுவனப் பணத்தையும் மோசடி செய்த முன்னாள் ஊழியருக்கு 22 மாதங்கள் சிறை!

சிங்கப்பூர், நவம்பர் 3: சிங்கப்பூர் சமூகப் பிரபலமும் கோடீஸ்வரர் பீட்டர் லிம்மின் மகளுமான கிம் லிம்மிடம் ஆடம்பரக் கைக்கடிகாரம் மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடியதுடன், நிறுவனத்தின் கடன் அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி, நிறுவனத்துக்குச் சொந்தமான காரை மது அருந்திவிட்டு ஓட்டிய முன்னாள் ஊழியருக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

33 வயதான டே டிங் வென்னுக்கு 22 மாதச் சிறைத்தண்டனையுடன் 3,500 சிங்கப்பூர் டாலர் (சுமார் RM11,200) அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், சிறையிலிருந்து விடுதலையான நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அவர் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ அல்லது புதிதாகப் பெறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 8ஆம் தேதி, பணியாளராக இருந்தபோது திருடியது, நிறுவன ஊழியராக நம்பிக்கை மோசடி செய்தது, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டியது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கும்போது நீதிமன்றத்தின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

நீதிமன்ற ஆவணங்களின்படி, திருடப்பட்ட பொருட்களில் 73,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள படேக் பிலிப் (Patek Philippe) கைக்கடிகாரமும், சுமார் 8,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கப் பணம் கொண்ட சிவப்பு நிறப் பண உறைகளும் அடங்கும். இவற்றின் மொத்த மதிப்பு 81,000 சிங்கப்பூர் டாலராகும்.

பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து கடிகாரம், பணம் திருட்டு

CNA செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, டே டிங் வென் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிம் லிம்மின் அழகு, நலவாழ்வு மற்றும் சுகாதார நிறுவனமான KL Health நிறுவனத்தில் மனிதவள உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

நிறுவனத்தின் அன்றாட நிர்வாகப் பணிகளில் அவர் கிம் லிம்முடன் நெருக்கமாகப் பணியாற்றினார். கிம் லிம் அலுவலகத்தில் இல்லாத நேரங்களில், மற்ற ஊழியர்கள் டே டிங் வென்னிடம் வழிகாட்டுதல்களைக் கேட்டுப் பெறுவார்கள். அவர் கிம் லிம்மிடம் அனுமதி பெற்ற பின்னர் அதனை ஊழியர்களுக்குத் தெரிவித்து வந்தார்.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கிம் லிம்மின் தனிப்பட்ட உதவியாளர் பணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, தனது அலுவலகப் பாதுகாப்புப் பெட்டகத்தின் ரகசிய எண்ணை டே டிங் வென்னிடம் கிம் லிம் ஒப்படைத்தார்.

ஆனால், 2024ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, 73,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள படேக் பிலிப் கைக்கடிகாரத்தையும், சுமார் 8,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கப் பணத்தையும் அவர் திருடியதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிணையில் வெளியில் இருந்தபோது, திருடிய கைக்கடிகாரத்தைப் பழைய பொருட்கள் விற்பனையாளர் எனக் கூறிய ஒருவரிடம் 16,500 சிங்கப்பூர் டாலருக்கு விற்றுள்ளார்.

அந்தப் பணத்தில் ஒரு பகுதியை நிறுவனத்தின் கடன் அட்டையை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்கான தொகையைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தியுள்ளார். மீதமுள்ள பணத்தையும் திருடிய ரொக்கத்தையும் தனது சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்தியதாக CNA செய்தி வெளியிட்டுள்ளது.

நிறுவனக் கடன் அட்டையைச் சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்தினார்

நிறுவனப் பணிகளுக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்ட கடன் அட்டையைத் தனது சொந்தச் செலவுகளுக்கும் டே டிங் வென் பயன்படுத்தியுள்ளார்.

2025ஆம் ஆண்டு மே 21 முதல் 26ஆம் தேதி வரை எட்டு முறை அந்த அட்டையைப் பயன்படுத்தி, பாய் கோங் பிரீமியம் கிளப் (Bai Gong Premium Club) மற்றும் ஹவுஸ் சிங்கப்பூர் (House Singapore) ஆகிய இடங்களில் மொத்தம் 19,191.12 சிங்கப்பூர் டாலர் செலவிட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனத்தின் கடன் அட்டையைப் பயன்படுத்தி 10,101 சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான மதுபானங்களைப் பெற்றுக்கொண்டு, தனியார் நிறுவனத்திடம் மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதுதவிர, 66,000 சிங்கப்பூர் டாலர் மற்றும் மேலும் 8,000 சிங்கப்பூர் டாலர் தொகையைத் தனது சொந்தச் செலவுகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாக நம்பிக்கை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றிருந்தன.

கிம் லிம்முக்குச் சொந்தமான மேலும் சில விலை உயர்ந்த பொருட்களைத் திருடியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவற்றில் 705 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள கிறிஸ்டியன் டியோர் வாசனைத் திரவியம், 3,600 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள டிஃபனி அண்ட் கோ காதணிகள், 6,929 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள சேனல் மேலங்கி ஆகியவை அடங்கும்.

மேலும், பல்கேரி கைக்காப்பு மற்றும் டியோர், லூயிஸ் உய்ட்டன் நிறுவனங்களின் பல வாசனைத் திரவியங்களும் திருடப்பட்ட பொருட்களில் இடம்பெற்றிருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு குறைந்தது 11,234 சிங்கப்பூர் டாலராகும்.

மது அருந்திவிட்டு எதிர்த்திசையில் கார் ஓட்டியதால் கைது

2025ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி அதிகாலை, கோல்மன் லேன் சாலையில் இருந்து கோல்மன் ஸ்ட்ரீட் நோக்கி எதிர்த்திசையில் கார் ஓட்டிச் சென்றதைப் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் கவனித்ததைத் தொடர்ந்து டே டிங் வென் கைது செய்யப்பட்டார்.

அவரது மூச்சுப் பரிசோதனையில், ஒவ்வொரு 100 மில்லிலிட்டர் மூச்சிலும் 46 மைக்ரோகிராம் அளவு மதுபானம் இருந்தது கண்டறியப்பட்டது. சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட அளவு 35 மைக்ரோகிராம் மட்டுமே.

மேலும், செல்லுபடியாகும் மூன்றாம் தரப்பு காப்புறுதியும் இல்லாமல், வகுப்பு 3 ஓட்டுநர் உரிமமின்றியும் அவர் வாகனம் ஓட்டியுள்ளார்.

அந்தக் கார், நிறுவனத்தின் அன்றாடப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஓட்டுநர்கள் பயன்படுத்துவதற்காக KL Health நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் காரின் சாவிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு டே டிங் வென்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

எனினும், கிம் லிம் வெளிநாட்டில் இருந்தபோது அவரது அனுமதியின்றி காரின் சாவியை எடுத்துக்கொண்டு, நிறுவன அலுவலகத்திலிருந்து தஞ்சோங் பகார் பகுதிக்கு இரவு உணவு சாப்பிடச் சென்றபோது அவர் பிடிபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிருங்கள்: