கோலாலம்பூர், நவம்பர் 3: உலகின் மற்ற நாடுகளில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மலேசியாவைப் பாதிக்காது என்று மக்கள் நினைக்கக் கூடாது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
இதற்கு உதாரணமாக, இஸ்ரேலிய உளவுத்துறையின் நடவடிக்கைகள் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இஸ்ரேலிய குடியேற்றங்கள் குறித்த கவலைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
அண்டை நாடுகளில் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் மலேசியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
“இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளின் நடவடிக்கைகள், அண்டை நாடுகளில் அவற்றின் செயல்பாடுகள், குறிப்பாக புக்கெட் மற்றும் தெற்கு தாய்லாந்தில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்கள் ஆகியவை நாட்டுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று எமது உளவுத்துறை அமைப்புகள் கருதுகின்றன,” என்று நவம்பர் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.
ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதிக்கும் இணையத் தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் உள்ளிட்ட வெளிநாட்டு நிலவரங்களை மலேசிய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த அச்சுறுத்தல்கள் நம்மிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதாக நினைக்கக் கூடாது. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடந்த சம்பவங்கள் அந்நாடுகளில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன,” என்றார் அவர்.
சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் தங்களது குடிமக்கள் மூன்று முதல் 10 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அவசர காலத்துக்காகச் சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக அன்வார் கூறினார்.
அரசாங்க இணைய அமைப்புகள் மீதான பல்வேறு தாக்குதல்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெல்ஜியத்தின் தேசிய வரி இணையதளம் முடங்கியது, டென்மார்க்கின் மத்திய மக்கள் பதிவேட்டில் ஊடுருவல் நடைபெற்றது, அமெரிக்காவின் மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணத் தாக்கல் இணைய அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டது ஆகியவை அவற்றில் அடங்கும்.
ஜப்பானில் நடைபெற்ற இணைய ஊடுருவல் சம்பவத்தில் 100,000க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவங்களால் மலேசியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக நவம்பர் 2ஆம் தேதி தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (NSC) சிறப்புக் கூட்டம் நடைபெற்றதாக அன்வார் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இணைய அச்சுறுத்தல்கள், பல்வேறு வழிகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு ஆபத்துகள், ஈரான் தொடர்பான அணுசக்தி பதற்றம் அதிகரிக்கும் சாத்தியம் மற்றும் ஐரோப்பிய அரசியல் மாற்றங்களால் நிர்வாக அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது.
“நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கெனவே உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், அமைச்சுகள், அரசாங்க அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது, எந்தவொரு அவசரச் சூழலையும் எதிர்கொள்ள நாட்டைத் தயார்படுத்துவது ஆகியவை குறித்து விவாதித்தோம்,” என்றார்.
மேலும், நவம்பர் 3ஆம் தேதி தொடர்புடைய அரசுத் துறைகளுடன் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் கூட்டம் நடத்தவுள்ளதாகவும், பேங்க் நெகாரா மலேசியா ஆளுநர் நாட்டின் நிதி நிறுவனங்களுடன் சிறப்புக் கூட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எரிசக்தி, போக்குவரத்து, நிதித்துறை மற்றும் உணவு விநியோகம் போன்ற முக்கிய துறைகளின் பாதுகாப்பை அரசு வலுப்படுத்தி வருவதாகவும் அன்வார் தெரிவித்தார்.
அதேவேளை, பொதுமக்கள் அவசரச் சூழல்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதையும், நாட்டின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதையும் அரசு உறுதி செய்து வருகிறது.
அனைத்து அமைச்சுகளும் அரசாங்க அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், குறிப்பாக பாதுகாப்புப் படைகள் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், மலேசிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் தேசிய காவல்துறைத் தலைவர் ஆகியோர் நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலை குறித்து தமக்கு உறுதியளித்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
