பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 3: நிகோட்டின் திரவத்தை நச்சுப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான புதிய முயற்சிக்கு மலேசிய குழந்தைகள் மருத்துவச் சங்கம் (MPA) கவலை தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு நச்சுப் பொருட்கள் வாரியம் (Poisons Board) ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான காரணங்களை வாரியம் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு இதேபோன்ற முயற்சி முன்வைக்கப்பட்டபோது, குழந்தைகளும் நிகோட்டின் வேப்களைப் பயன்படுத்தும் ஆபத்து ஏற்படும் என்பதால் நச்சுப் பொருட்கள் வாரியம் ஒருமனதாக அதனை நிராகரித்ததாக MPA தெரிவித்தது.
“வாரியம் தனது முடிவை மாற்றிக்கொள்வதற்கு புதிய ஆதாரங்கள் இருந்தால், அவை பொதுமக்களும் மருத்துவ நிபுணர்களும் ஆய்வு செய்யும் வகையில் வெளியிடப்பட வேண்டும். அத்தகைய ஆதாரங்கள் இல்லையென்றால், இந்த முடிவை நியாயப்படுத்த முடியாது,” என்று சங்கம் அறிக்கையில் குறிப்பிட்டது.
நிகோட்டின் போதை ஏற்படுத்தக்கூடியதும் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியதுமாகும் என்று தெரிவித்த சங்கம், வேப்களை சட்டப்பூர்வமாக்கிவிட்டு கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறுவது மட்டும் குழந்தைகளைப் பாதுகாக்கப் போதுமானதா என்றும் கேள்வி எழுப்பியது.
இதற்கிடையில், நிகோட்டின் திரவத்தை மீண்டும் நச்சுப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான முயற்சிக்கு நச்சுப் பொருட்கள் வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கெப்ளி அகமட் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவச் சங்கமும் (MMA) வலியுறுத்தியுள்ளது.
வேப்கள் தொடர்பான அமைச்சரின் நிலைப்பாட்டையும் MMA கேள்வி எழுப்பியது. கடந்த ஆண்டு, மலேசியாவில் வேப்களுக்கு தடை விதிக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என்று அமைச்சர் கூறியிருந்ததைச் சங்கம் நினைவுபடுத்தியது.
2023ஆம் ஆண்டு அப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா, நச்சுப் பொருட்கள் வாரியத்தின் எதிர்ப்பையும் மீறி நிகோட்டின் திரவம் மற்றும் ஜெல் வகைகளுக்கு விலக்கு அளிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.
ஆனால், நச்சுப் பொருட்கள் வாரியத்துடன் முறையான ஆலோசனை நடத்தாமல் அந்த முடிவு எடுக்கப்பட்டதால் அது சட்டவிரோதமானது என்று கூறி, கடந்த மே மாதம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அந்த விலக்கை ரத்து செய்தது.
நிகோட்டின் வேப்களைச் சட்டப்பூர்வமாக்கிவிட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதாகக் கூறினாலும், குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள், பெற்றோர், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மீது விழும் என்று MPA தெரிவித்தது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நிகோட்டின் அவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் சங்கம் எச்சரித்தது. இதனால், வேப்களைப் பரிசோதித்துப் பார்க்கும் ஆர்வம் எளிதில் நிகோட்டின் பழக்கமாக மாறும் ஆபத்து உள்ளதாகவும் குறிப்பிட்டது.
எனவே, குழந்தைகளைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் அவசியம் என்றும் வலியுறுத்தியது.
“சட்ட ஆலோசகர்கள், சந்தைப்படுத்தல் நிபுணர்கள் மற்றும் ஆதரவாளர்களைக் கொண்ட பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒரு குழந்தையால் போட்டியிட முடியாது. இந்த ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வது சட்டத்தின் கடமை.
“நிகோட்டின் வேப்களைச் சட்டப்பூர்வமாக்கிவிட்டு, கண்காணிப்பை அதிகரிப்பதாகக் கூறுவது சரியான சமரசம் அல்ல. அது குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும் முடிவாகும்,” என்றும் சங்கம் தெரிவித்தது.
