சரவாக் மாணவர்களுக்கு மேலும் 3 பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வி? அபாங் ஜொஹாரி தகவல்!

கூச்சிங், நவம்பர் 3: சரவாக் மாநிலத்தில் செயல்படும் மூன்று மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் சரவாக் மாணவர்களையும் இலவச உயர்கல்வித் திட்டத்தின் (FTES) கீழ் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என்று சரவாக் மாநிலத்தின் காபந்து முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒபெங் தெரிவித்துள்ளார்.

மலேசிய சரவாக் பல்கலைக்கழகத்தின் (UNIMAS) துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் அஹ்மத் ஹத்தா ரசித் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இத்திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து கொள்கை அளவில் பரிசீலிக்கத் தாம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

“இந்தக் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும், தற்போது அரசாங்கம் காபந்து நிலையில் இருப்பதால் இன்று எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்க முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை இங்குள்ள டி.இ.டி.ஏ.ஆர் புத்ரா அரங்கில் நடைபெற்ற UNIMAS பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சரவாக் அரசாங்கம் மீண்டும் மக்களின் ஆணையைப் பெற்ற பிறகு இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்படும் என்றும், இதன் மூலம் மலேசிய சரவாக் பல்கலைக்கழகம் (UNIMAS), மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (UiTM) மற்றும் பிந்துலுவில் உள்ள மலேசிய புத்ரா பல்கலைக்கழக வளாகம் (UPM Bintulu) ஆகியவற்றுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என்றும் அபாங் ஜொஹாரி கூறினார்.

இம்மூன்று கல்வி நிறுவனங்களிலும் FTES திட்டத்தின் கீழ் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள 64 பாடப்பிரிவுகளில் கல்வி பயிலும் சரவாக் மாணவர்களுக்கு மட்டுமே இந்த விரிவாக்கம் பொருந்தும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தீபகற்ப மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் சரவாக் மாணவர்களை இத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

“தீபகற்ப மலேசியாவில் கல்வி பயிலும் மாணவர்கள் இப்போதைக்கு காத்திருக்க வேண்டும். எங்களுக்கு ஏராளமான கோரிக்கைகள் கிடைத்துள்ளதால், இது தொடர்பாக இன்னும் முடிவெடுக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

எனினும், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் சரவாக் மாணவர்களுக்கு அன்றாடச் செலவுகளுக்கான நிதியுதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற உரையில், குறிப்பாக தங்களது அடையாள அட்டையில் ‘K’ என்ற குறியீட்டைக் கொண்ட சரவாக் மாணவர்கள் UNIMAS மற்றும் UiTM பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும்போது, அவர்களின் கல்விச் செலவுகள் முழுமையாக நிதியுதவி பெறுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்த சரவாக் அரசாங்கம் விரும்புவதாக அபாங் ஜொஹாரி தெரிவித்தார்.

உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இந்த முயற்சிகள், மனிதவள மேம்பாட்டில் சரவாக் அரசாங்கம் தொடர்ந்து கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு ஏற்ப அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பகிருங்கள்: