துரியான் துங்கல் துப்பாக்கிச் சூடு: மரண விசாரணையில் திட்டமிட்ட தாமதம் இல்லை – உள்துறை அமைச்சர் விளக்கம்!

கோலாலம்பூர், நவம்பர் 3: மலாக்கா மாநிலம் துரியான் துங்கலில் கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஆண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

விசாரணை நடைபெறும் தேதியை நிர்ணயிப்பது நீதிமன்றத்தின் நடைமுறைகள் மற்றும் வழக்கு நிர்வாகத்தைப் பொறுத்தது என்றும் அவர் கூறினார்.

காவல்துறை சமர்ப்பித்த விசாரணை அறிக்கைகள் மற்றும் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த பின்னர், 2026 ஜூலை 20ஆம் தேதி மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு, சம்பவம் தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விரிவான விசாரணையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை மறுஆய்வு செய்ததுடன், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் வழங்கிய கூடுதல் அறிவுறுத்தல்கள் மற்றும் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, மரண விசாரணைக்கான தேதியை நிர்ணயிக்குமாறு மலாக்கா நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளது.

எனினும், விசாரணைக்கான தேதியை நீதிமன்றம் இன்னும் அறிவிக்கவில்லை. காவல்துறை அதற்காகக் காத்திருப்பதாக சைஃபுதீன் தெரிவித்தார்.

“இந்த விவகாரத்தில், விசாரணை நடைபெறும் தேதியை நிர்ணயிப்பது நீதிமன்றத்தின் நடைமுறைகள் மற்றும் வழக்கு நிர்வாகத்தைப் பொறுத்ததாகும்.

“மரண விசாரணை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் வலியுறுத்த விரும்புகிறது.

“விரிவான விசாரணை, சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் மறுஆய்வு மற்றும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் கூடுதல் அறிவுறுத்தல்கள், தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னரே மரண விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது,” என்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அவர் குறிப்பிட்டார்.

துரியான் துங்கல் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மரண விசாரணை எப்போது தொடங்கும், அதன் தாமதத்திற்கான காரணம் என்ன என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மரண விசாரணையை நடத்துவதற்கு நீதிமன்றத்துக்கும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கும் காவல்துறை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உள்துறை அமைச்சு உறுதியளிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், நீதித்துறை நடைமுறைகளின் சுதந்திரத்தை அரசாங்கம் மதிப்பதாகவும், நீதிமன்றத்தின் முடிவுகள் குறித்து முன்கூட்டியே எந்தக் கருத்தையும் தெரிவிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

“உயிரிழப்புகளுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் உண்மையான சூழ்நிலைகளை வெளிப்படையான, நியாயமான மற்றும் சட்டபூர்வமான நடைமுறையின் மூலம் உறுதிப்படுத்துவதற்கு இந்த மரண விசாரணை மிகவும் முக்கியமானது,” என்றும் அவர் கூறினார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சட்டம் 593) பிரிவு 339(1)-இன் கீழ் இந்த மரண விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையில், சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் துரியான் துங்கலில் உள்ள எண்ணெய்ப்பனைத் தோட்டத்தில், மூன்று ஆண்களில் ஒருவர் நீண்ட கத்தியை (பாராங்) வீசி காவல்துறை கோப்ரல் ஒருவரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 24 முதல் 29 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரியின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பகிருங்கள்: