கோலாலம்பூர், நவம்பர் 4 : பிரபல சமயப் போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தப்போவதில்லை என மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக எந்தவொரு உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கூறுகையில், 2010ஆம் ஆண்டு மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் 6ஆம் பிரிவு மற்றும் 1992ஆம் ஆண்டு நாடு கடத்தல் சட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசிடமிருந்து புதிய நாடு கடத்தல் கோரிக்கை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். முன்னதாக, 2018 ஜனவரி 19ஆம் தேதி இந்தியாவின் அதிகாரப்பூர்வ கோரிக்கையும், 2020 மே 29ஆம் தேதி மறுபரிசீலனை கோரும் தூதரகக் குறிப்பும் மலேசியாவுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அவர், மலேசியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே அரசின் முடிவு அமைந்துள்ளதாக விளக்கினார்.
கடந்த செப்டம்பர் மாதம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பில் ஜாகிர் நாயக்கின் நாடு கடத்தல் விவகாரம் பேசப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் சட்டரீதியான நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹசான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தியாவில் பணமோசடி மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்த விவகாரம் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
