18 வயதுக்கு மேற்பட்டோருக்கான திரைப்படங்களை வெட்டுத் திருத்தமின்றித் திரையிட அனுமதி – தியோ நீ சிங்

கோலாலம்பூர், நவம்பர் 4 : 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான திரைப்படங்களைத் தணிக்கை வெட்டுகள் இன்றி திரையிடலாம். இருப்பினும், வயது அடிப்படையிலான திரைப்பட வகைப்பாட்டு விதிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் எனத் துணைத் தொடர்புத்துறை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டின் திரைப்படத் தணிக்கை வழிகாட்டுதலின்படி, திரைப்படங்களின் உள்ளடக்கங்களை வெட்டித் திருத்துவதற்குப் பதிலாக, பார்வையாளர்களின் வயதுக்கு ஏற்ப வகைப்படுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இவ்வகைத் திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவர் என்றும், வயது வகைப்பாடு என்பது எந்தவொரு உள்ளடக்கத்தையும் கட்டுப்பாடின்றித் திரையிடுவதற்கான அனுமதி அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், உள்துறை அமைச்சின் கீழ் செயல்படும் திரைப்படத் தணிக்கை வாரியம், பொதுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு, மதம், சமூகக் கலாசாரம், ஒழுக்கம் மற்றும் நன்னெறி ஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையில் திரைப்படங்களைத் தொடர்ந்து மதிப்பீடு செய்யும் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கங்கள் உள்ளிட்ட தணிக்கை வழிகாட்டுதல்களை மீறும் படங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கு உதாரணமாக, இயக்குநர் அமண்டா நெல் இயூ இயக்கிய மலேசியத் திரைப்படமான Tiger Stripes திரைப்படம் 2023ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்றிருந்தாலும், மலேசியாவில் திரையிடப்பட்டபோது வெட்டுத் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற உள்ளூர் திரைப்படங்களை மலேசிய ரசிகர்களும் முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மக்களிடையே ஒற்றுமை, இன நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் திரைப்படங்களை உருவாக்க, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (FINAS) தேசிய படைப்புத் தயாரிப்பு நிதி ஊக்கத்திட்டத்தைப் பயன்படுத்துமாறு திரைப்படத் தயாரிப்பாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.

பகிருங்கள்: