காஜாங்கில் கார் துரத்தல் – போதைப்பொருளுடன் பெண் கைது, ஓட்டுநர் தப்பியோட்டம்

காஜாங்: ஜாலான் ரெகோ பகுதியில் போலீஸ் சோதனையை மீறி தப்பிச் சென்ற கார், பின்னர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதில் இருந்து 2.13 கிராம் சியாபு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் இருந்த ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஜாலான் ரெகோ பகுதியில் போலீசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான அந்தக் கார் சோதனைக்காக நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது.

இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்த நிலையில், கார் செமிஞி நோக்கிச் சென்றதுடன் SILK நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு விபத்துக்குள்ளானதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்துள்ளார்.

பின்னர், ஜாலான் ரெகோ சந்திப்பில் போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். சோதனையின்போது காரில் இருந்த பெண்ணிடம் இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பெண்ணிடம் முறையான பயண ஆவணங்கள் இல்லாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, போதைப்பொருளின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படும் தப்பியோடிய ஆடவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பகிருங்கள்: