ஈப்போவில் உள்ள தங்கும் விடுதியைக் கொண்ட பள்ளியொன்றில் இன்ஃப்ளூயன்ஸா ஏ தொற்று குழுமம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 46 மாணவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா போன்ற அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பேராக் மாநில மனிதவள, சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஏ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 14ஆம் தேதி வரை அறிகுறிகளுடன் இருந்த 61 மாணவர்களிடம் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 46 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்த்தொற்று இருப்பதும், 14 பேருக்கு மேல் சுவாசப் பாதை தொற்று இருப்பதும், ஒருவருக்கு கண் அழற்சி இருப்பதும் கண்டறியப்பட்டது.
செப்டம்பர் 15ஆம் தேதி நிலவரப்படி, பரிசோதனை செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் சீரான நிலையில் இருப்பதாக சிவநேசன் தெரிவித்தார்.
பள்ளியில் முதற்கட்டமாக திங்கட்கிழமை அறிகுறிகளுடன் இருந்த 57 மாணவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், மேலும் 39 மாணவர்கள் நேற்று அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, பரிசோதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்தது.
புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளை பேராக் மாநில சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தேவையான கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என அவர் கூறினார்.
அறிகுறிகள் உள்ள குழந்தைகள் முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அறிகுறிகள் நீடித்தாலோ அல்லது மோசமடைந்தாலோ குழந்தைகளை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுமாறும், தடுப்பூசி வழங்கும் சுகாதார நிலையங்களில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை பரிசீலிக்குமாறும் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
