குழந்தையை ஆற்றில் வீசியதாகச் சந்தேகம் – நபருக்கு 7 நாள் காவல்

ஜொகூர், தஞ்சோங் செடிலியில் 5 வயது சிறுமியை ஆற்றில் வீசியதாக சந்தேகிக்கப்படும் 37 வயது நபர், ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பான குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் விசாரணைக்கு உதவும் வகையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (செப்டம்பர் 21) கம்போங் பாடாங் பகுதியில், 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டதாக நம்பப்படும் நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். சிறுமியை அவரது மாமா ஆற்றில் வீசியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்திற்குப் பின்னர், சந்தேகநபர் வாளுடன் 40 வயது ஆடவரைத் துரத்தியதுடன், போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ஒரு போலீஸ் அதிகாரியும் காயமடைந்ததாகக் கோத்தா திங்கி மாவட்டக் காவல் தலைவர் சூப்பிரண்டண்ட் யூசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலேயே உதவி மருத்துவ அதிகாரி சிறுமி உயிரிழந்ததை உறுதி செய்தார். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பாசிர் கூடாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

சந்தேகநபர் முன்னதாக கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், செவ்வாய்க்கிழமை காலை சுமார் 9 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பகிருங்கள்: