மலேசிய கராத்தே வீராங்கனை சி. ஷால்மலராணி, Aichi-Nagoya ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு குமிட்டே போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.
டொயோஹாஷி ஜிம்னாசியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹொங்கொங்கைச் சேர்ந்த Tsang Yee Ting உடன் மோதிய ஷால்மலராணி, போட்டி 0-0 என சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து நடுவர்களின் Hantei தீர்ப்பின் மூலம் வெற்றி பெற்றார்.
முன்னதாக அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் Gulshan Alimardanovaவை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவரிடம் தோல்வியடைந்த நிலையில், இந்த வெற்றி ஷால்மலராணிக்கு முக்கியமான வெற்றியாக அமைந்தது.
தொடக்கச் சுற்றில் மக்காவைச் சேர்ந்த Fong Man Waiயை 8-0 என்ற கணக்கிலும், காலிறுதியில் வங்கதேசத்தின் Saiama Jamanஐ 5-4 என்ற கணக்கிலும் அவர் வீழ்த்தினார்.
வெற்றிக்குப் பின்னர் பேசிய 27 வயதான ஷால்மலராணி, “இந்தத் தங்கப் பதக்கத்தை மலேசியாவிற்காக வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்தத் தருணத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தேன்,” என்றார்.
அலிமர்தனோவாவை முதல் முறையாக வீழ்த்தியது குறித்துப் பேசிய அவர், “அவர் இதற்கு முன்பு என்னை மூன்று முறை தோற்கடித்துள்ளார். அவரை முதல் முறையாக வென்றது எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது. இது இனிமையான பழிவாங்கல் என்றாலும், அவருக்கு நான் எப்போதும் உயர்ந்த மரியாதை வைத்திருக்கிறேன்,” என்றார்.
மூன்று SEA Games தங்கப் பதக்கங்களை ஏற்கனவே வென்றுள்ள ஷால்மலராணி, தற்போது தனது சாதனைப் பட்டியலில் ஆசிய விளையாட்டுப் போட்டி தங்கத்தையும் இணைத்துள்ளார்.
மேலும், அடுத்த இலக்காக உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் “நிச்சயமாக” எனப் பதிலளித்தார்.
ஷால்மலராணியின் வெற்றி மூலம் ஜப்பானில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் மலேசிய அணி மொத்தம் 2 தங்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
Adeola Fay Robert பெண்கள் 55 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற நிலையில், K. Thevendran, H. Sureeya Sankar மற்றும் ஆண்கள் Kata அணியினர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
