இந்தியாவின் டெல்லி, சீமாபுரி பகுதியில் புதன்கிழமை மாலை 4 மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாலை 3.30 மணியளவில் டெல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர்களில் சுமார் 12 வயது சிறுமி மற்றும் 4 மாத கர்ப்பிணியான 21 வயது குலாஃப்சா ஆகியோர் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மற்றொரு குழந்தையின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
மீட்கப்பட்ட 8 பேரும் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 3 வயது குழந்தையும் அடங்கும்.
கட்டிடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் சிலரும் மீட்புப் பணிகளில் உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், அவசியமின்றி அப்பகுதிக்கு வர வேண்டாம் என டெல்லி போக்குவரத்து காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, டெல்லி-என்சிஆர் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான உண்மையான காரணம் விசாரணைக்குப் பின்னரே உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
