மாணவர் உயிரிழந்த வழக்கு: மூத்த காவல்துறை அதிகாரிக்கு 7½ ஆண்டுகள் சிறை!

ஈப்போ, அக்டோபர் 28 – ஐந்தாம் படிவ மாணவர் முஹம்மது சரீஃப் அஃபெந்தி முஹம்மது ஸம்ரி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட மூத்த காவல்துறை அதிகாரி டிஎஸ்பி முஹம்மது நஸ்ரி அப்துல் ரசாக்கிற்கு ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

47 வயதான முஹம்மது நஸ்ரி, வழக்கின் அரசுத் தரப்பு விசாரணை முடிவில் திருத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி டத்தோ புபிந்தர் சிங் குர்ச்சரன் சிங் இந்தத் தண்டனையை அறிவித்தார்.

முன்னதாக, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் இருந்த நிலையில், பின்னர் பிரிவு 304(b)-இன் கீழ் திருத்தப்பட்டது. இந்தப் பிரிவு, கொலை செய்யும் நோக்கமின்றி ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருப்பது தொடர்பான குற்றத்தை உள்ளடக்கியது.

திருத்தப்பட்ட குற்றச்சாட்டின்படி, 2023 டிசம்பர் 15ஆம் தேதி, மேரு இந்தா சுற்றுவட்டச் சாலையில் உள்ள ஜாலான் தாமான் ஜாத்தி 1 சந்திப்பில், தேசிய இடைநிலைப் பள்ளி (SMK Jati) அருகே, மாணவர் முஹம்மது சரீஃப் அஃபெந்தியின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டது.

மேலும், உயிரிழந்த மாணவரின் தந்தைக்கு 50,000 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், அதற்குப் பதிலாக ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதற்கிடையில், தண்டனையைக் குறைக்கக் கோரி முன்வைக்கப்பட்ட வாதத்தின்போது, குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியின் காவல்துறைப் பணிப் பதிவையும், இதற்கு முன்பு அவர் எந்தக் குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படாதவர் என்பதையும் கருத்தில் கொள்ளுமாறு தற்காப்புத் தரப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.

பகிருங்கள்: