ரயில்களில் கூட்ட நெரிசல்: உடனடி நடவடிக்கை எடுக்க அன்வார் உத்தரவு!

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 30: ரயில்களில் ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம், போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் மற்றும் Rapid KL நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Threads சமூக வலைத்தளத்தில் பயணி ஒருவர் கோம்பாக் மற்றும் தைப்பான் LRT நிலையங்களில் காணப்படும் கூட்ட நெரிசல் குறித்து புகார் தெரிவித்திருந்தார்.

“தினமும் இதே நிலைதான். காரில் சென்றால் போக்குவரத்து நெரிசல்; ரயிலில் சென்றால் பயணிகள் கூட்டம். கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்க முடியுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அன்வார், இந்தப் பிரச்சினை பலரின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதால் சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையில், கிளானா ஜெயா LRT வழித்தடத்திற்காக 26 புதிய ரயில் தொகுதிகளை Prasarana நிறுவனம் வாங்கியுள்ளது. அவற்றின் விநியோகம் 2029ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளானா ஜெயா LRT வழித்தடத்தை தினமும் சுமார் 2.9 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இது கிள்ளான் பள்ளத்தாக்கின் மிகவும் பரபரப்பான LRT வழித்தடமாகும்.

பகிருங்கள்: