ஜோகூர் பாரு, நவம்பர் 2: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் மக்களின் நலனுக்காக மொத்தம் RM318,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், லார்கின் பகுதியில் உள்ள செரந்தாவ் பாரு அடுக்குமாடிக் குடியிருப்பின் படிக்கட்டுகளுக்கான கைப்பிடிகளைப் பழுதுபார்க்க RM260,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய சமூகத்தின் வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த RM47,500 வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் நான்கு அரசு சாரா அமைப்புகளுக்கு (NGO) சமூக நலன், கலாசாரம் மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக RM10,500 வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு, பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் MADANI உள்கட்டமைப்பு மற்றும் சமூகப் பதிலளிப்புத் திட்டத்தின் (PRISMA) மூலம் வழங்கப்படுவதாக ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர் தெரிவித்தார்.
குறிப்பாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உதவி தேவைப்படும் மக்களின் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
“இங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் 17 மாடிகளைக் கொண்டவை. அவற்றின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. பொதுவாக இதுபோன்ற பராமரிப்புப் பணிகள் கட்டட நிர்வாகத்தின் பொறுப்பாக இருந்தாலும், இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமானம் கொண்டவர்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொண்டோம்.
“எனவே, அவர்களுக்கு உதவும் நோக்கில் RM260,000 நிதியை ஒதுக்கி, பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்றார்.
ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் செரந்தாவ் பாரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
