2,504 ஆசிரியர்களுக்கு RM120 ஊக்கத்தொகை ‘கட்’! பள்ளிகளின் தரமாற்றத்தால் அதிர்ச்சி முடிவு!

கோலாலம்பூர், : பள்ளிகளின் தரநிலை மறுவகைப்படுத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்து, தகுதியை இழந்த இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 2,504 மூத்த பாட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி ஊக்கத்தொகை (ETPS) இம்மாதம் முதல் நிறுத்தப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளையில், அடுத்த ஆண்டு தரம் A பள்ளிகளாக உயர்த்தப்பட்ட இடைநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 1,356 மூத்த பாட ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

தகுதியை இழந்த ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகைத் திருப்பிச் செலுத்தும் நடைமுறைகளில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஆசிரியர்களுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படாத வகையில் இந்த விவகாரம் கவனமாகக் கையாளப்படும் என்றும் அமைச்சு உறுதியளித்துள்ளது.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி அமலுக்கு வந்த பள்ளிகளின் தரநிலை மறுவகைப்படுத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்து, கல்வி ஊக்கத்தொகை தொடர்பாக ஆசிரியர்கள் எழுப்பியுள்ள கவலைகளை அமைச்சு புரிந்துகொண்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளியில் வழங்கப்படும் கல்வி நிலை ஆகிய மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டு இந்த மறுவகைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருத்தப்பட்ட புதிய தரநிலை முறையின்படி, இடைநிலைப் பள்ளிகள் தற்போது தரம் A மற்றும் தரம் B என இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, 339 இடைநிலைப் பள்ளிகள் தரம் B-இலிருந்து தரம் A-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அதேவேளையில், 626 பள்ளிகள் தரம் A-இலிருந்து தரம் B-ஆகத் தரமிறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நடைமுறையில் உள்ள பொதுச் சேவை ஊதிய முறை (SSPA) விதிமுறைகளின்படி, தரம் A இடைநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் மூத்த பாட ஆசிரியர்களுக்கு மட்டுமே மாதந்தோறும் RM120 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பள்ளிகளின் தரநிலை மாற்றத்தால் தற்போது பணியில் உள்ள மொத்தம் 3,860 மூத்த பாட ஆசிரியர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த மார்ச் முதல் ஜூலை மாதம் வரை ஆசிரியர் சங்கங்களுடன் கல்வி அமைச்சு பல்வேறு கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தியது.

அந்தக் கூட்டங்களின்போது, தரம் B இடைநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் மூத்த பாட ஆசிரியர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காகப் பொதுச் சேவைத் துறையிடம் (PSD) மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் முன்மொழிந்தன.

இதன் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி கல்வி அமைச்சு மேல்முறையீட்டு கடிதத்தைச் சமர்ப்பித்தது. இருப்பினும், செப்டம்பர் 23ஆம் தேதியிட்ட பதில் கடிதத்தில், அந்த மேல்முறையீட்டைப் பரிசீலிக்க இயலாது எனப் பொதுச் சேவைத் துறை தெரிவித்ததாக அமைச்சு கூறியது.

பாடங்களைக் கண்காணிப்பதிலும், பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும் மூத்த பாட ஆசிரியர்கள் ஆற்றிவரும் பங்களிப்பைத் தாங்கள் மதிப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அமைச்சு தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் இணைந்து ஆசிரியர் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிருங்கள்: