வாஷிங்டன், நவம்பர் 4 : அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி, ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும் அவரது குடியரசுக் கட்சிக்கும் பெரும் அரசியல் பின்னடைவாக அமைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில், நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, ஈரான் போர் மற்றும் அரசாங்கத்தில் நிலவும் ஊழல் குறித்த கவலைகள் காரணமாக மக்கள் ஆளும் தரப்புக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
டெக்சாஸ், அயோவா மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சில மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மைனே மாநிலத்தில் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட குடியரசுக் கட்சி செனட்டர் சூசன் காலின்ஸும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ட்ராய் ஜாக்சனிடம் தோல்வியடைந்தார்.
கடந்த ஒரு மாதமாக குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக டிரம்ப் பல தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்ற போதிலும், இந்தத் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.
இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால், டிரம்ப் தனது பதவிக்காலத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகளில் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவும், அவரது குடும்பத்தினரின் நிதி விவகாரங்களை ஆராயவும் திட்டமிட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். டிரம்ப் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பையும் அவர்கள் நிராகரிக்கவில்லை.
தேர்தல் வெற்றியைக் கொண்டாடிய செனட் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர், இந்த வெற்றி அமெரிக்க அரசியல் வரைபடத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், அமெரிக்க மக்கள் நாட்டில் பெரிய மாற்றத்தை விரும்புவதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், குடியரசுக் கட்சியின் தோல்விக்கு வேட்பாளர்களே காரணம் என டிரம்ப் குற்றஞ்சாட்டினார். ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களுக்கு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், இந்தத் தேர்தல் தோல்வியைத் தனது தனிப்பட்ட தோல்வியாகக் கருதவில்லை என்றும், குடியரசுக் கட்சி வேட்பாளர்களை மக்கள் விரும்பவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
மறுபுறம், குடியரசுக் கட்சி செனட் தலைவர் ஜான் தியூன், ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து செயல்படுவோம் எனக் குறிப்பிட்டார்.
செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு எதிர்பாராத வெற்றி
குடியரசுக் கட்சி தனது செனட் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல குடியரசுக் கட்சியின் ஆதிக்க மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது.
அயோவாவில் ஜோஷ் டுரெக், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஆஷ்லே ஹின்சனைத் தோற்கடித்தார்.
கன்சாஸ் மாநிலத்தில் ஆடம் ஹாமில்டன், செனட்டர் ரோஜர் மார்ஷலைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் மூலம் 1932ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த மாநிலத்தின் முதல் ஜனநாயகக் கட்சி செனட்டராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெக்சாஸில் ஜேம்ஸ் தலரிகோ, கென் பாக்ஸ்டனைத் தோற்கடித்தார். தென் கரோலினாவில் அன்னி ஆண்ட்ரூஸ் வெற்றி பெற்றார். ஓஹியோவில் ஷெராட் பிரவுனும், வட கரோலினாவில் ராய் கூப்பரும் வெற்றியைப் பதிவு செய்தனர்.
இந்தத் தேர்தல்களில் டிரம்ப் முக்கியப் பங்கு வகித்தார். சில குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளித்ததுடன், தனது கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களையும் அவர் விமர்சித்திருந்தார்.
ஜோர்ஜியா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜான் ஒசோஃப் மீண்டும் வெற்றி பெற்றார். நியூ ஹாம்ப்ஷயரில் கிறிஸ் பப்பாஸ், முன்னாள் செனட்டர் ஜான் சுனுனுவைத் தோற்கடித்தார்.
பிரதிநிதிகள் சபைத் தேர்தலிலும் நியூ ஜெர்சி, வட கரோலினா மற்றும் அயோவா உள்ளிட்ட மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
தேர்தல் பிரசாரத்துக்காக குடியரசுக் கட்சி பல மில்லியன் டொலர்களைச் செலவிட்டிருந்தாலும், அது ஜனநாயகக் கட்சியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.
வாழ்க்கைச் செலவு உயர்வு குறித்து மக்கள் அதிருப்தி
அமெரிக்க மக்களிடையே நிலவும் அதிருப்தியே தேர்தல் முடிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக AP செய்தி நிறுவனம் நடத்திய வாக்காளர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
சுமார் 75 சதவீத வாக்காளர்கள் நாட்டின் தற்போதைய நிலை குறித்து கோபமாக அல்லது அதிருப்தியாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
பொருளாதார நிலைமையும் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக இருந்தது. சுமார் 75 சதவீத வாக்காளர்கள் நாட்டின் பொருளாதார நிலை மோசமாக இருப்பதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும், விலைவாசி உயர்வு தங்களது குடும்பங்களின் நிதிநிலையைப் பாதித்துள்ளதாக 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க ஊழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவை வாக்களிக்கும் முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சுமார் 60 சதவீத வாக்காளர்கள், நாட்டின் நலனைவிட தனது சொந்த நலனுக்கே டிரம்ப் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கருதுகின்றனர்.
எனினும், ஜனநாயகக் கட்சிக்கும் மக்கள் மத்தியில் முழுமையான ஆதரவு இல்லை. வாக்காளர்களில் பாதிக்கும் குறைவானவர்களே அந்தக் கட்சிக்கு ஆதரவான கருத்தைக் கொண்டுள்ளனர்.
ஆளுநர் தேர்தல்களிலும் முக்கிய மாற்றங்கள்
அமெரிக்காவின் 36 மாநிலங்களில் ஆளுநர் தேர்தல்களும் நடைபெற்றன.
பென்சில்வேனியாவின் ஜோஷ் ஷப்பிரோ, இல்லினாய்ஸின் ஜே.பி. பிரிட்ஸ்கர், மேரிலாந்தின் வெஸ் மூர், மசாசூசெட்ஸின் மௌரா ஹீலி மற்றும் நியூயார்க்கின் கேத்தி ஹோக்கல் ஆகிய ஜனநாயகக் கட்சி ஆளுநர்கள் மீண்டும் வெற்றி பெற்றனர்.
டெக்சாஸில் குடியரசுக் கட்சி ஆளுநர் கிரெக் அபோட்டை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜினா ஹினோஜோசா எதிர்பாராத வெற்றியைப் பெற்றார்.
ஓஹியோவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமியை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஏமி ஆக்டன் தோற்கடித்தார்.
ஜோர்ஜியாவில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கெய்ஷா லான்ஸ் பாட்டம்ஸ், அமெரிக்க மாநிலம் ஒன்றின் முதல் கறுப்பினப் பெண் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
அதேவேளை, புளோரிடாவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பைரன் டொனால்ட்ஸ், அமெரிக்காவில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பினக் குடியரசுக் கட்சியினராக வரலாறு படைத்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனநாயகக் கட்சி திட்டம்
பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி, முதல் 100 நாட்களுக்கான செயல் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து விசாரணைகளைத் தீவிரப்படுத்துவது ஆகியவை அதன் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளன.
இந்தத் தேர்தல் வெற்றி, எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடும் எனக் கருதப்படும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, டிரம்புக்கு ஆதரவளித்து வரும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட குடியரசுக் கட்சித் தலைவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் சவாலாக அமையக்கூடும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளமை, அந்நாட்டின் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் பதவிக்காலத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகளில் அவரது நிர்வாகம் அதிக அரசியல் எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

