கோலாலம்பூர் | மார்ச் 08, 2026 :
நாட்டின் நெல் மற்றும் அரிசித் துறையை வலுப்படுத்தும் நோக்கில், மூடா விவசாய மேம்பாட்டு வாரியத்தின் (MADA) கீழ் புதிய அரிசி ஆலை ஒன்றை அமைக்க அரசாங்கம் 45.6 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த ஆலை கெடா மாநிலத்தின் மெகாட் தேவா (Megat Dewa) பகுதியில் அமைக்கப்படும் என்றும், நெல் சேகரிப்பு, பதப்படுத்துதல் மற்றும் அரிசி உற்பத்தியை மிகவும் திறம்படச் செய்வதே இதன் நோக்கம் என்று, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.
இடைத்தரகர்களின் (Middlemen) தலையீட்டைக் குறைத்து, விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பதை இந்த ஆலை உறுதி செய்யும் என்றும், 2026-ஆம் ஆண்டில், ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 6.1 டன்கள் நெல் விளைச்சலை எட்ட MADA இலக்கு நிர்ணயித்துள்ளது.
நாட்டின் அரிசித் தன்னிறைவு அளவை தற்போதுள்ள 52.6 சதவீதத்திலிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் 70 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
விவசாய உள்கட்டமைப்பு வலுப்படுத்தும் மாஸ்டர் பிளான் (2026-2040) கீழ் ‘3M’ (கட்டுதல், மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்) என்ற அணுகுமுறையை அமைச்சு செயல்படுத்த உள்ளது.
இதில் 2,000 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்ப்பாசனக் கால்வாய்களைப் பராமரித்தல், விளைபொருட்களை எளிதாகக் கொண்டு செல்ல 1,346 கி.மீ நீளமுள்ள விவசாயச் சாலைகளை மேம்படுத்துதல், பழைய உள்கட்டமைப்புகளைச் சீரமைத்து நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் என்பன அடங்கும்.
“நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளவும் விவசாயத் துறையைத் தற்சார்பு கொண்டதாக மாற்றுவதே இந்த ஆண்டின் முக்கிய நோக்கமாகும்,” என்று அமைச்சர் முகமட் சாபு வலியுறுத்தினார்.




