உறுதிமொழியை மீறிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு கோரி பிகேஆர் வழக்கு

ஷெரட்டன் நகர்வைத் தொடர்ந்து 2020ல் 22 மாத பக்காத்தான் ஹராப்பான் கூட்டாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ஒருவரான அதன் ஆறு முன்னாள் எம்.பி.க்கள் மீது பிகேஆர் வழக்குப் பதிவு செய்துள்ளது.

பிகேஆர் பொதுச்செயலாளர் புசியா சலே, கட்சியின் சார்பில் வழக்குத் தொடுத்து, பாரு பியான் (செலாங்காவ்), கமருடின் ஜாபர் (பந்தர் துன் ரசாக்), மன்சோர் ஓத்மான் (நிபோங் டெபல்), ரஷித் ஹஸ்னோன் (பது பஹாட்), சைபுதீன் எஸ் அப்துல்லா (இந்தேரா மஹ்கோடா) ஆகிய 6 பேரையும் பெயரிட்டார்.

2020 இல் வெளியேறிய 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கட்சி இதேபோன்ற வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இரண்டு தனித்தனி வாத அறிக்கைகளில், 2018-ஆம் ஆண்டு 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கையெழுத்திட்ட உறுதிமொழியை மீறியதற்காக, பிரதிவாதிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 10 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு கோருவதாக புசியா தெரிவித்துள்ளார்.

Nav & Co எனும் சட்ட நிறுவனம் இந்த வழக்குகளை பிப்ரவரி 19 அன்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீதிமன்றம் இந்த வழக்கை மேலாண்மை செய்வதற்காக மார்ச் 27-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.

உறுதிமொழி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின்படி, பிரதிவாதிகள் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, கட்சியிலிருந்து விலகினாலோ, மற்றொரு அரசியல் கட்சியில் இணைந்தாலோ அல்லது சுயேச்சை மக்கள் பிரதிநிதிகளாக மாறினாலோ, அந்தத் தொகையை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

14-வது பொதுத் தேர்தலில், கட்சி பல நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று, அதன் தொடர்ச்சியாக கூட்டரசு மற்றும் பல மாநில அரசாங்கங்களை அமைத்தது.

பிகேஆர் பேனரின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிவாதிகள் ஒவ்வொருவரும், பிப்ரவரி 24, 2020 அன்று அல்லது அதற்கு இடைப்பட்ட காலத்தில் கட்சியில் இருந்து விலகியது பகிரங்கமாகத் தெரியவந்தது என்று புசியா கூறினார்.

மேலும், பிரதிவாதிகள் அனைவரும் பக்காத்தான் ஹரப்பான் அல்லாத வேறொரு அரசியல் கூட்டணியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர் அல்லது ஆதரவளித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாரு பியான் தவிர, மற்ற அனைவரும் ‘ஷெரட்டன் நகர்வு’ நடவடிக்கையின் போது முகிதின் யாசின் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு ஆதரவு அளித்தனர். பின்னர் முகிதின் பெரிக்காத்தான் நேசனல் கூட்டரசு அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கினார்.

மார்ச் 11, 2020 அன்று அவர்களின் உறுப்பினர் பதவிகளை ரத்து செய்து, ஒப்பந்தத்தின்படி நஷ்டஈடு வழங்குமாறு பிகேஆர் கோரியது. ஆனால் அதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

தமது கட்சியின் நற்பெயரைப் பாதுகாக்கவும், கொள்கைகளை முன்னெடுக்க மனித வளத்தை மேம்படுத்தவும், வேட்பாளர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கவும், தேசிய மற்றும் மாநில அளவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து கூட்டரசு மற்றும் மாநில அளவில் தேர்தல் வெற்றியைப் பெறவும் கட்சி கணிசமான வளங்களைச் செலவிட்டுள்ளதாக புசியா தெரிவித்தார்.

பிரதிவாதிகளின் ராஜினாமா அல்லது கட்சி மாறுதல் நடவடிக்கை, கூட்டரசு அல்லது மாநில அளவில் ஆளும் பெரும்பான்மையின் கட்டமைப்பை மாற்றியதோடு, தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையை நிறைவேற்றும் கட்சியின் திறனையும் பாதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

செப்டம்பர் 2020-இல், அப்போதைய பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுதின் நசுத்தியோன் இஸ்மாயில், முகிதினுக்கு ஆதரவாகக் கட்சியிலிருந்து வெளியேறிய அப்போதைய அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கமாருதினுக்கு எதிராக இதேபோன்ற வழக்கைத் தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில், சுரைடா கட்சிக்கு 100,000 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அதிக நஷ்டஈடு கோரி கட்சி தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

 

 

-fmt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *