மலேசியாவில் அரசாங்க ஊழியர்கள் உத்தியோகபூர்வ பணிகளின்போது Waze செயலியைப் பயன்படுத்துவதற்கான தடையைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சைத்ரெட்ஸான் ஜோஹான் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய விளக்கத்தின்படி, இந்தத் தடை தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு நிறுவனங்களால் தரவுகள் சேகரிக்கப்படுவது மட்டுமன்றி, மலேசியா அங்கீகரிக்காத இஸ்ரேல் தொடர்பான பாதுகாப்பு கவலைகளும் இதில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட TuJu செயலியில் பல குறைபாடுகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், அவற்றை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், TuJu செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை என்றும், பிற மாற்றுச் செயலிகளையும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் உத்தியோகபூர்வ பணிகளில் ஈடுபடும்போது, முக்கியமான தகவல்கள் மற்றும் தரவுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு Waze செயலிக்கான தடையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இறுதியாக, தேசிய பாதுகாப்பையும் மக்களின் நலனையும் அரசியல் சர்ச்சையாக மாற்றக்கூடாது என்றும், நாட்டின் நலன்களில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது என்றும் சைத்ரெட்ஸான் ஜோஹான் வலியுறுத்தியுள்ளார்.
