தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இந்து மதத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குழு அடிப்படையிலான பதிவு செய்யப்படாத விடுமுறை (Cuti Tanpa Rekod – CTR Kelompok) சலுகையில் சிறப்புத் தளர்வு வழங்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
YB லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு தீபாவளி நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நவம்பர் 9ஆம் தேதி திங்கட்கிழமை மாற்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேதிகள் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதால், இந்து அரசு ஊழியர்கள் CTR Kelompok விடுமுறைச் சலுகையை முழுமையாகப் பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படும் இந்து அரசு ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சிறப்புத் தளர்வு வழங்குவது குறித்து பொதுச் சேவைத் துறையான JPA ஆய்வு செய்யுமாறு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தக் கோரிக்கைக்கு சாதகமான பரிசீலனை வழங்கப்பட்டால், இந்து அரசு ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடவும், பண்டிகைக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் உதவியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
