மலேசிய இந்தியத் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு AI தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் – ஜக்கராவ்

கோலாலம்பூர், நவம்பர் 4 : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மலேசிய இந்திய வர்த்தகச் சமூகத்தின் வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், தொழில்முனைவோர் மற்றும் அவர்களது குடும்பங்களின் சமூகப் பொருளாதார நிலையையும் மேம்படுத்த உதவும் என அஜெண்டா சூரியா கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிறுவனருமான ஜக்கராவ் சிமான்சா தெரிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியத் தொழில்முனைவோர் தங்களது வணிகத்தை விரிவுபடுத்தவும், டிஜிட்டல் உலகில் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என அவர் கூறினார்.

புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு தீபாவளி வர்த்தகக் கண்காட்சியில் உரையாற்றிய அவர், AI தொழில்நுட்பம் இந்தியச் சமூகத்தின், குறிப்பாகத் தொழில்முனைவோரின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் என்றார்.

மேலும், 2002ஆம் ஆண்டு 40 விற்பனைக் கூடங்களுடன் தொடங்கப்பட்ட தீபாவளி வர்த்தகக் கண்காட்சி, தற்போது 434 விற்பனைக் கூடங்களுடன் வளர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரை இக்கண்காட்சிக்கு வருகை தருகின்றனர்.

வருகையாளர்களில் 20 முதல் 25 விழுக்காட்டினர் இந்தியர் அல்லாத பிற இனங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 25 ஆண்டுகளில் இக்கண்காட்சியின் மூலம் 3,000க்கும் மேற்பட்ட இந்தியச் சிறு தொழில்முனைவோர் உருவாக உதவியுள்ளதாகவும், சிறு வணிகங்கள் படிப்படியாகச் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களாக வளர்வதற்கு இக்கண்காட்சி ஒரு தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரிக்ஃபீல்ட்ஸில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, இடப்பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2012ஆம் ஆண்டு புக்கிட் ஜாலிலுக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்தக் கண்காட்சி இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

இதற்கிடையில், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து மாறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன. ஒரு Gen Z செய்தி வெளியீட்டாளராக, AI மனிதகுலத்திற்கு ஏற்பட்ட மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று என்ற தனிப்பட்ட பார்வையும் முன்வைக்கப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் அதன் எதிர்மறையான தாக்கங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

இந்தக் கண்காட்சிக்கு அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றும், அதன் மூலம் உள்ளூர் இந்தியத் தொழில்முனைவோர் தங்களது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அதிக வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜக்கராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

பகிருங்கள்: