சம்ரி வினோத்தை மிரட்டிய சந்தேகத்தில் ஆடவர் கைது; சம்ரிதான் முதலில் மோதியதாக ராயர் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-8 – சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை மிரட்டிய சந்தேகத்தில் ஆடவர் ஒருவரை பினாங்கு போலீஸ் கைதுச் செய்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இந்திய இளைஞர்களை சம்ரி தான் முதலில் தனது காரால் மோத முயன்றதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் குற்றம் சாட்டியுள்ளார்.

புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள முனீஸ்வரர் கோயில் தொடர்பாக நேற்று அடுத்தடுத்து இந்த சர்ச்சைகள் அரங்கேறியுள்ளன.

நேற்று பிற்பகல் 3.30 மணி வாக்கில் Aston Acacia-வில் தான் குடியிருக்கும் பகுதியில் இருந்து காரிலிருந்து கிளம்பும் போது, இந்திய ஆடவர் கும்பலொன்று காரை வழிமறித்து கட்டை மற்றும் கற்களால் தன்னைத் தாக்க முயன்றதாக சம்ரி போலீஸில் புகாரளித்தார்.

தன்னை அவர்கள் குத்த முயன்று தோல்லி கண்டதாகவும், அவர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் காரை தாம் வேகமாக செலுத்திய போது மோட்டார் சைக்கிளில் இருந்த 2 இந்திய ஆடவர்களை மோத நேர்ந்ததாகவும் அவர் கூறிக் கொண்டார்.

தவிர, அவர்கள் கற்களை வீசி தனது காரின் இடப்பக்க கண்ணாடியை உடைத்து விட்டதாகவும் சம்ரி தனது புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், 20 வயது தொழிற்சாலை ஊழியரான சந்தேக நபரைக் கைதுச் செய்தது.

இன்று காலையே புக்கிட் மெர்தாஜாம் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவ்விளைஞரை, 4 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், சம்ரி நடந்ததாகக் கூறும் சம்பவத்திற்கு முன்பே அவர் தான் முதலில் ஆபத்தாக வாகனமோட்டிச் சென்று, மோட்டார் சைக்கிளோட்டியை மோதி விட்டு தப்பிச் சென்றதாக ராயர் கூறுகிறார்.

VML 9332 என்ற கார் பதிவு எண் பட்டையைக் கொண்ட Jaguar Sedan சொகுசு கார் சாலையில் அபாயகரமாக ஓடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

எனவே, இவ்விவகாரத்தில் இந்த சம்பவத்தையும் போலீஸார் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என ராயர் வலியுறுத்தினார்.

அதோடு, அந்த காரில் இருந்தது சம்ரி வினோத் என்பது உண்மையென்றால், புக்கிட் மெர்தாஜாம் கோயில் பக்கம் வர வேண்டாம் என போலீஸ் விடுத்த எச்சரிக்கையையும் மீறி அவர் வந்தது எப்படி?…

…ஆபத்தாக வாகனமோட்டி மோட்டார் சைக்கிளோட்டியின் உயிரைப் பறிக்கப் பார்த்த சம்ரி கைதுச் செய்யப்படுவாரா? …

…என ராயர் அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சம்ரி வினோத் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரரா என்ற கேள்வியை உள்துறை அமைச்சிடம் தாம் கேட்க விரும்புவதாக ராயர் காட்டமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *