சுங்கைபூலோமலர்ச்செழிப்பைகாக்கவேண்டும்

சிலாங்கூரின் சுங்கை பூலோ பகுதி பல ஆண்டுகளாக மலர் மற்றும் தோட்டக்கலைத் துறையில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இன்று அந்தப் பெருமைமிக்க மரபு சவால்களை எதிர்கொண்டு நிற்கிறது. கிரீன் லேன் பகுதியில் செயல்பட்டு வந்த தோட்டக்கலை நர்சரிகள் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருப்பது, இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள பல தொழிலாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள ஒரு மாத கால அவகாசத்துடன் வெளியேற்ற அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெட்டாலிங் மாவட்ட அலுவலகம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், அந்த இடம் EPF நிறுவனத்துக்குச் சொந்தமான குவாசா டாமன்சாரா மேம்பாட்டுத் திட்டத்திற்காகத் தயாராக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சுங்கை பூலோவில் உள்ள இந்த நர்சரிகள் புதியவை அல்ல. 1990களிலிருந்தே சிலாங்கூர் மாநில அரசின் வேளாண்மை தொடர்பான அமைப்பான PKPS மூலம் தொழில்முனைவோர்கள் இங்கு அழைக்கப்பட்டு, தற்காலிக நில பயன்பாட்டு அனுமதி (TOL) வழங்கப்பட்டு தோட்டக்கலை வளர்ச்சிக்கு ஊக்குவிக்கப்பட்டது. அதன் விளைவாக சுங்கை பூலோ இன்று மலர் வளர்ப்பு மற்றும் தோட்டக்கலைத் தொழிலில் ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.

இந்த நர்சரிகளை மாற்றி அமைப்பதற்கான முயற்சி முன்பும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு பந்திங் அருகிலுள்ள புக்கிட் சாங்காங் பகுதியில் ஒரு புதிய நர்சரி மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த இடம் தாழ்வான நிலப்பகுதியாகவும் வெள்ளப் பாதிப்புக்கு உட்பட்டதாகவும் இருந்ததால், தேவையான அடிப்படை வசதிகள் உருவாக்கப்படாத காரணத்தால் அந்தத் திட்டம் செயல்பட முடியாமல் போனது.
அந்தத் திட்டத்தில் ஈடுபட்ட நர்சரி உரிமையாளர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதுடன் முன்பணத்தையும் செலுத்தியிருந்த போதிலும், சரியான இடத் தேர்வு இல்லாத காரணத்தால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னர், பொருத்தமான மாற்று இடம் ஒன்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

கோம்பாக், கோலா சிலாங்கூர் அல்லது ஹுலு செலாங்கூர் போன்ற பகுதிகளில், PKPS நிர்வாகத்தின் கீழ் ஒரு புதிய நர்சரி மையத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாகும். இது தோட்டக்கலைத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பெரும் ஆதாரமாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

சிலாங்கூர் போன்ற நகரமயமாக்கல் வேகமாக நடைபெறும் மாநிலத்தில் பசுமை வளர்ப்பு, அழகுபடுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை. இந்த சூழலில் தோட்டக்கலைத் துறை ஒரு முக்கிய பங்காற்றுகிறது.
ஒரு திட்டமிட்ட நர்சரி மையம் உருவாக்கப்பட்டால், அது ஒரு பொருளாதாரத் தளமாக மட்டுமல்லாது சுற்றுலா ஈர்ப்புத் தளமாகவும் வளர வாய்ப்பு உள்ளது. பல வண்ணமலர்கள், தோட்ட அலங்கார வடிவமைப்புகள், கைவினைப் பொருட்கள் மற்றும் பல்வேறு காட்சிகள் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கும் திறன் கொண்டவை.

மேலும், மலேசியாவின் தோட்டக்கலைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளையும் இது அதிகரிக்கக்கூடும். இத்தகைய பல்வேறு நன்மைகள் உள்ள நிலையில், சுங்கை பூலோவின் மலர்ச்செழிப்பை காக்கவும், அந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிலையான மாற்று ஏற்பாடுகளை வழங்கவும் மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் வலுப்பெற்று வருகிறது.
சிலாங்கூரின் பசுமை மரபை தாங்கி நிற்கும் இந்தத் தோட்டக்கலைத் துறையை பாதுகாப்பது, மாநிலத்தின் எதிர்கால சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவசியமானதாகும்.

சுங்கை பூலோவை மையமாகக் கொண்டு வளர்ந்து வந்த தோட்டக்கலைத் துறை, மலேசியாவின் பசுமை பொருளாதாரத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆசியான் நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலர் மற்றும் தோட்டக்கலைத் துறையை பெரிதும் பாராட்டியதுடன், பல்வேறு மலர்கள் மற்றும் அலங்காரத் தாவரங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.
சிலாங்கூர் அரச குடும்பமும் தங்களின் அரண்மனைகளில் உள்ள தோட்டங்களை அலங்கரிக்க வண்ணமயமான செடிகள் மற்றும் மரங்களை இந்த நர்சரிகளிலிருந்தே அடிக்கடி வாங்கி வருகின்றனர். இது சுங்கை பூலோவின் தோட்டக்கலைத் துறையின் தரத்தையும் புகழையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சான்றாகும்.

ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் தொடர்ந்து அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சாலை விரிவாக்கம், நீர்க்குழாய் அமைப்புகள் போன்ற பல்வேறு மேம்பாட்டு திட்டங்களின் காரணமாக எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்ற நிலை அவர்களை நிலையான வளர்ச்சியிலிருந்து தடுத்து வருகிறது.

இந்தத் தொடர்ச்சியான அச்சம் காரணமாக பல நர்சரி உரிமையாளர்கள் தங்கள் தொழிலில் முதலீடு செய்யவும், விரிவுபடுத்தவும் தயங்கியுள்ளனர். வளர்ந்து வரும் சந்தைத் தேவையை பூர்த்தி செய்யும் வாய்ப்புகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிலையான தீர்வாக, திட்டமிட்ட முறையில் ஒரு நர்சரி மையம் (Nursery Hub) உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. சுமார் 100 நிலப்பகுதிகளை கொண்ட, தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு நர்சரி மையம் உருவாக்கப்பட்டால், அது தோட்டக்கலைத் துறைக்கு பெரும் முன்னேற்றமாக அமையும்.

இத்தகைய மையம் நகரப் பசுமை வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகர அழகுபடுத்தல் மற்றும் நில மீட்பு முயற்சிகளுக்கும் பெரிதும் உதவும். அதே சமயம் இது சுற்றுலா ஈர்ப்புத் தளமாகவும் வளரக்கூடிய திறன் கொண்டது.

தோட்டக்கலை என்பது வெறும் வேளாண்மைத் துறை மட்டுமல்ல; அது ஒரு படைப்பாற்றல் மிக்க தொழில்துறையாகும். எனவே படைப்புத் தொழில்துறைகளை ஊக்குவிக்கும் செலாங்கூர் மாநில அரசின் கொள்கைகளில் தோட்டக்கலையும் ஒரு முக்கிய இடம் பெற வேண்டும்.
இந்தத் துறையால் கிடைக்கும் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை கருத்தில் கொண்டு, அதன் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யும் ஒரு தெளிவான மற்றும் செயல்திறன் மிக்க திட்டத்தை மாநில அரசு வகுக்க வேண்டியது அவசியமாகிறது.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, எதிர்கால தலைமுறைகள் பெருமைப்படும் வகையில் ஒரு நிலையான தோட்டக்கலை மரபை உருவாக்கும் வாய்ப்பு இப்போது அவரிடம் உள்ளது.

நர்சரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும் மாநிலத்தின் பொருளாதார நலனையும் சமநிலைப்படுத்தும் வகையில், மனிதநேயத்துடனும் முன்னோக்கிய பார்வையுடனும் ஒரு இருதரப்புக்கும் சாதகமான தீர்வு உருவாகும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *