ஜொகூர்பாரு:
டான்ஸ்ரீ நோ ஓமர் மீண்டும் அம்னோவில் இணைந்திருப்பது தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜொகூர் தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திரங்கள் அறிமுக நிகழ்ச்சியில் அவர் தோன்றியமை, அரசியல் பார்வையாளர்களிடையே பல்வேறு ஊகங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
நோ ஓமரின் வருகை மட்டுமின்றி, முன்னாள் மூத்த அம்னோ தலைவர்களான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் மற்றும் டான்ஸ்ரீ சைட் ஹமீத் அல்பார் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஹாஹிட் ஹமிடி, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த மூன்று மூத்த தலைவர்களுக்கும் உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை வழங்கினார்.
கடந்த சில ஆண்டுகளாக கட்சியிலிருந்து விலகியிருந்த அல்லது செயலற்ற நிலையில் இருந்த பல முக்கிய தலைவர்கள் மீண்டும் அம்னோவுடன் இணைவது, கட்சியின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு புதிய வலுசேர்க்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வரவிருக்கும் ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு இந்த முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது அரசியல் அரங்கில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக அம்னோவை கடுமையாக விமர்சித்த சில தலைவர்கள் கூட தற்போது கட்சியுடன் மீண்டும் இணைந்து செயல்படத் தொடங்கியிருப்பது, தேசிய முன்னணியின் அரசியல் அணுகுமுறையில் புதிய மாற்றங்களை சுட்டிக்காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சம்பவம், அம்னோ தனது பழைய செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவா அல்லது எதிர்வரும் தேர்தல்களுக்கான பெரிய அரசியல் திட்டத்தின் தொடக்கமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
