இன ஒற்றுமையை வலுப்படுத்த செபாக் தக்ராவை தேசிய அடையாளமாக உயர்த்த வேண்டும் – பிரதமர் அன்வார்

செபாக் தக்ரா விளையாட்டை ஒரு தேசிய மரபுடைமை விளையாட்டாக மட்டுமல்லாமல், இன ஒற்றுமையை வலுப்படுத்தும் ஓர் அடையாளமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இந்த முயற்சியில், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு (KBS) பல்லின இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிராமப்புற சமூகங்களின் வாழ்வியலுடன் நீண்ட காலமாக இணைந்திருக்கும் செபாக் தக்ரா, பல தலைமுறைகளாக மக்களிடையே பிரபலமான விளையாட்டாக இருந்து வருகிறது.
ஆனால், இந்த விளையாட்டின் வளர்ச்சி வீரர்கள் அல்லது சங்கங்கள் மட்டுமின்றி, இளைஞர்களிடையே பரவலாக ஆர்வத்தை உருவாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக மலாய் இளைஞர்கள் அதிகமாக ஈடுபட்ட இந்த விளையாட்டில், இனி மற்ற இனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்கும் சூழல் கண்டிப்பாக உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய செபாக் தக்ரா அகாடமி வளாக திறப்பு விழாவில் உரையாற்றியபோது, விளையாட்டு என்பது மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக விளங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *