பூச்சோங், அக்டோபர் 30: வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் அவசரகால உபகரணங்களுக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NADMA) அறிவுறுத்தியுள்ளது.
NADMA தலைமை இயக்குநர் டத்தோ மீர் இஸ்மாயில் மீர் அகிம் கூறுகையில், கடைசி நேரத்தில் நிதி மற்றும் உபகரணங்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது சம்பந்தப்பட்ட அமைப்புகளின் தயார்நிலையைப் பாதிக்கக்கூடும் என்றார்.
குறிப்பாக, கொள்முதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளுக்கு ஆறு மாதங்கள் வரை தேவைப்படலாம் என்பதால், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திலேயே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என்றும், படகுகளைப் பழுதுபார்ப்பதற்கான நிதி அல்லது புதிய உபகரணங்களுக்கான உதவியைக் கடைசி நேரத்தில் கோரக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை 2026 தொடர்பாக அரசாங்கத்தின் தயார்நிலை குறித்து ஊடகங்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், பேரிடர் மேலாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட அமைப்பின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து அரசாங்க அமைப்புகளும் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை விரைவாகவும் திறம்படவும் வழங்க முடியும் என்றார்.
மழை முன்னறிவிப்பும் வெள்ள முன்னறிவிப்பும் ஒன்றல்ல
MTL 2026/2027 காலப்பகுதியில் நிலவும் வானிலை அபாயங்கள் குறித்து பேசிய அவர், மழை முன்னறிவிப்புக்கும் வெள்ள முன்னறிவிப்புக்கும் இடையிலான வேறுபாட்டைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) வெளியிடும் கனமழை எச்சரிக்கை, எந்த இடத்தில் எப்போது வெள்ளம் ஏற்படும் என்பதைத் துல்லியமாகக் கணிக்காது என்றும் அவர் விளக்கினார்.
மழையின் அளவு மற்றும் நீடிக்கும் காலம், நில அமைப்பு, ஆறுகளின் நீர்மட்டம் மற்றும் உள்ளூர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட பல காரணிகள் வெள்ள அபாயத்தைத் தீர்மானிக்கின்றன.
எனவே, பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகள் வெளியிடும் எச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் NADMA கேட்டுக்கொண்டுள்ளது.
