வளைகுடா பதற்றம்; துபாயில் சிக்கித் தவித்த 15 மலேசியர்கள்; நாடு திரும்பியவர்களை MITEA வரவேற்றது

செப்பாங், மார்ச்-8 – அமெரிக்கா – ஈரான் இடையிலான போரில், அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறி வைத்து வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி வருவது அறிந்ததே.

இதனால் ஏராளமான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டு, வெளிநாட்டவர்கள் அங்கேயே சிக்கித் தவிக்கின்றனர்.

Golden Signature Travel & Tours Sdn Bhd நிறுவனத்தின் மூலம் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு சுற்றுலா சென்றிருந்த 15 மலேசியர்களும் அவர்களில் அடங்குவர்.

11 பெண்கள் அடங்கிய அக்குழுவினர் துபாயில் 10 நாட்களாக சிக்கித் தவித்த நிலையில், Golden Signature உறுப்பினராக உள்ள மலேசிய இந்திய சுற்றுலாத்துறை தொழில்முனைவோர் சங்கமான MITEA-யின் துணையுடன் அவர்கள் அனைவரும் நேற்று பாதுகாப்பாக தாயகம் வந்தடைந்தனர்.

அவர்களை MITEA தலைவர் தமிழ்ச் செல்வன் திருமலை தலைமையிலான குழுவினர் எதிர்கொண்டு வரவேற்றனர்.

அந்த 10 நாட்களும் எவ்வித பிரச்னையுமின்றி சுற்றுலா நிறுவனம் தங்களைப் பார்த்துக் கொண்டதாகவும், தற்போது பாதுகாப்பாக தாயகம் கொண்டு வந்திருப்பதாகவும் பயணிகள் சிலர் நெகழ்ச்சியுடன் கூறினர்.

ஒருவேளை தனியே சுற்றுலா சென்றிருந்தால் நிலைமை என்னவாயிருக்கும் என தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் Golden Signature Travel நிறுவனம், MITEA மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து, பரிந்துரைக்கப்பட்ட தேவையான நடவடிக்கைகளை எடுத்து, சுற்றுப் பயணிகளைப் பாதுகாப்பாக கொண்டு வந்த முயற்சியை, சங்கத் தலைவர் தமிழ்ச் செல்வன் பாராட்டினார்.

இது போன்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் பயணிகள் குறிப்பாக மலேசிய இந்திய சுற்றுப்பயணிகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு சங்கம் தக்க முயற்சிகளில் ஈடுபடும்.

இதற்காக MITEA-யில் உறுப்பியம் பெற்ற பயண நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *